ஈரானில் கரோனா தடுக்க கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

ஈரானில் கரோனா தடுக்க கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
Updated on
1 min read

ஈரானில் கரோனா தொற்று கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈரான் அரசு தீவிரமாக இறங்கி வருகிறது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில் கூறும்போது, “ ஈரானில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் கடந்த 5 நாட்களில் மட்டும் கரோனாவுக்கு 400க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். ஈரானில் இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய நகரங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

ஈரானில் சமீப நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிகையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வடபகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in