

பாகிஸ்தான் உட்பட 11 நாடுகளுக்குப் புதிதாக விசா வழங்குவதை ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய அமீரகம் தரப்பில், “கரோனா இரண்டாம் கட்டப் பரவல் தொடங்கியுள்ளதால் பாகிஸ்தான் உட்பட 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்குப் புதிதாக விசா வழங்குவது நிறுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் வணிகம், கல்வி, மருத்துவம் உட்பட பல்வேறு பிரிவுகளில் விசா வழங்கி வருகிறது. விசா தடையால் பாகிஸ்தான் மட்டுமல்லாது துருக்கி, சிரியா, இராக், சோமாலியா, கென்யா, லிபியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய அமீரகத்தில் 1,54,101 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
இந்த நிலையில் பல்வேறு நாடுகளில் கரோனா இரண்டாம் கட்டப் பரவல் தொடங்கியுள்ளது.