

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 25,012 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 25,012 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 201 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.
பிரேசிலில் கரோனாவுக்கு இதுவரை 57,01,283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.1,62,829 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் தொடர்ந்து ஐந்து மாகாணங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் பிப்ரவரி மாதம் முதல் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.
தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கரோனா வைரஸ் பரவலால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
இந்த நிலையில் சீனாவின் கரோனா தடுப்பு மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தியதன் காரணமாக தற்காலிகமாக மருத்துவப் பரிசோதனைகளை பிரேசில் நிறுத்தி வைத்துள்ளது.