

நியூசிலாந்திற்குள் நுழையும் சர்வதேச கடல்சார் குழுவுக்குக் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து சுகாதாரத் துறை அமைச்சர் கிரிஸ் ஹிப்கின்ஸ் கூறும்போது, “நியூசிலாந்திற்குள் கடல் வழியாக நுழையும் சர்வதேச கடல்சார் குழுவினருக்குக் கட்டாயமாகக் கரோனா பரிசோதனை செய்யப்படும். கரோனா கட்டுப்பாடுகளுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோவிட் சங்கிலிப் பரவலைத் தடுப்பது மிக அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
கரோனாவைத் தடுக்க மேம்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறோம் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்திற்காக நியூசிலாந்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கம்போல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கரோனா பரவல் நியூசிலாந்தில் கட்டுப்படுத்தப்பட்டது.