

கரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்க இருப்பதால் குளிர்காலம் கடுமையானதாக இருக்கும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, “நேற்று 2,674 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,22,887 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 10,001 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதுவரை 1,86,464 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்க இருப்பதால் குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
கனடாவில் கரோனா பரவலை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை பயணத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.