

ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் 11 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை தரப்பில், “ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் தாஹர் மாகாணத்தில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 11 குழந்தைகள் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
பலியானவர்கள் மசூதியில் பயின்ற சிறு மாணவர்கள். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாஹர் மாகாணத்தில் ஆப்கன் பாதுகாப்புப் படையினர் மற்றும் தலிபான்களுக்கு இடையே சில நாட்களாகவே மோதல் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கன் பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர்.
தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், ஆப்கன் அரசு தலிபான்களை அவ்வப்போது விடுவித்து வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அவர்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.