

ரஷ்யா, சீனாவிடமிருந்து விரைவில் தடுப்பு மருந்துகள் வாங்க இருப்பதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசு செய்தி ஊடகத்தில் நிக்கோலஸ் மதுரா கூறும்போது, “டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து தடுப்பு மருந்துகள் கிடைக்கும். தற்போது மருத்துவப் பரிசோதனைகளில் உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி வந்தவுடன் முதலில் முதியவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். எனினும் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவில் சுமார் 87,646 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுள்ளது. 80 ஆயிரம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கரோனா தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன. எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் உலக நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.