

போலந்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 9,622 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “போலந்தில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் அங்கு கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,622 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 90,162 பேர் கரோனா தொற்றால் குணமடைந்துள்ளனர். 3,524 பேர் பலியாகி உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன. எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் உலக நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன.