பிரான்ஸில் கரோனா 2-ம் கட்ட அலை; மீண்டும் ஊரடங்கு: அதிபர் இமானுவேல் மெக்ரான் உத்தரவு

பிரான்ஸ்  அதிபர் இமானுவேல் மெக்ரான் : கோப்புப் படம்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் : கோப்புப் படம்.
Updated on
2 min read

பிரான்ஸ் நாட்டில் கரோனா வைரஸ் 2-ம் கட்ட அலை பரவத் தொடங்கி, தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருவதால், அதிபர் இமானுவேல் மெக்ரான் பல்வேறு நகரங்களில் மீண்டும் ஊரடங்கைப் பிறப்பித்துள்ளார்.

இதன்படி, பாரீஸ், லில்லி, லியான், மார்சீல்லி, டூலோஸ், ரோயன், செயின்ட் ஈட்டினி, மான்ட்பெலியர் போன்ற நகரங்களில் வரும் வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அடுத்த 4 வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்தாற்போல் பிரான்ஸும் கரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்டது. ஏப்ரல், மே மாதங்களில் உச்சகட்டத்தை அடைந்து பாதிப்பு குறைந்தது. ஆனால், கடந்த ஜூலை மாதத்துக்குப் பின் மெல்ல, கரோனா வைரஸ் பரவல் பிரான்ஸில் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 10-ம் தேதி அதிகபட்சமாக 27 ஆயிரம் பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர்.

பிரான்ஸில் 2-ம் கட்ட கரோனா அலை உருவாகி வருவதாக மருத்துவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதுவரை பிரான்ஸில் மட்டும் 7.56 லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். 32,942 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சூழலில் பிரான்ஸில் மீண்டும் கரோனா பரவல் வந்துவிடக்கூடாது, 2-ம் கட்ட அலை உருவாவதைத் தடுக்கும் நோக்கில் பாரீஸ் உள்பட 10-க்கும் மேற்பட்ட நகரங்களி்ல ஊரடங்கு உத்தரவு வரும் வெள்ளிக்கிழமை முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் ஜின்குவா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ஊரடங்கு என்பது கரோனாவைத் தடுக்க போதுமான கருவி இல்லை என்பது தெரியும். இருப்பினும் நாம் கட்டுப்பாட்டுடன் இருக்காவிட்டால், நிலைமை மோசமாகவிடும் என்பதை உணர்ந்திருக்கிறோம். முதல் கட்ட கரோனா அலையில் பாடங்களைப் படித்துவிட்டோம்.

ஆதலால், வரும் வெள்ளிக்கிழமை முதல் அடுத்த 4 வாரங்களுக்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊடரங்கு பிறப்பிக்கப்படுகிறது. பாரீஸ், லில்லி, லியான், மார்சீல்லி, டூலோஸ், ரோயன், செயின்ட் ஈட்டினி, மான்ட்பெலியர் உள்பட 10 நகரங்களில் இந்தத் தடை அமலில் இருக்கும். இரவு நேரத்தில் கார் பயணம் செல்லக்கூடாதா என்று மக்கள் கேட்கலாம். மிகவும் அத்தியாவசியமானது, மருத்துவத் தேவைக்கு மட்டும் செல்லுங்கள்.

ஒன்றை மக்கள் மனதில் கொள்ள வேண்டும். நம் நாடு கரோனா 2-ம் கட்ட அலையை நோக்கி நகர்கிறது. நாம் கட்டுப்பாடுடன் இல்லாவிட்டால், மிகப்பெரிய இழப்பைச் சந்திப்போம். 8 மாதங்களாக வைரஸுடன் பழகிவிட்டோம் என்பதால், நாம் கவனக்குறைவுடன் இருக்க முடியாது. 2-ம் கட்ட அலைக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்” என்று மெக்ரான் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in