

சவுதியில் கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கவுள்ளது.
இதுகுறித்து சவுதி சுகாதாரத் துறை தரப்பில், “சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் பலியாக பலி எண்ணிக்கை 4,923 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 477 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். சவுதியில் இதுவரை 3,37,243 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதியில் கரோனா பரவலை தடுக்க சவுதி கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், பரவலைத் தடுக்கும் பொருட்டும் கடந்த மார்ச் மாதம் முதல் மெக்கா மசூதிக்குள் எந்த யாத்ரீகர்களையும், உள்ளூர் மக்களையும் தொழுகை நடத்த சவுதி அரேபிய அரசு அனுமதிக்கவில்லை. புனித பயணம் வரும் வெளிநாட்டு மக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. புனித ரமலான் பண்டிகையன்றுகூட மக்கள் யாரையும் தொழுகை நடத்த அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதையடுத்து, அங்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. முதல் நாளான இன்று மெக்கா புனித மசூதிக்குள் அதிகபட்சமாக 6 ஆயிரம் யாத்ரீகர்கள் மட்டும் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டனர்.
வெளிநாட்டு யாத்ரீகர்கள் யாருக்கும் அனுமதியளிக்காமல், உள்நாட்டு மக்களுக்கு மட்டும் தொழுகை நடத்த முதல்கட்டமாக அனுமதிக்கப்படுகின்றனர். நபர் ஒருவர் தொழுகை நடத்தி முடிக்க 3 மணிநேரம் அவகாசம் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.