

கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத் தீக்கு சுமார் 40 லட்சம் ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. காட்டுத் தீக்கு இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கனெக்டிகட் பரப்பளவுக்கு தீயின் வேகம் பரவியுள்ளது. சான் பிரான்சிஸ்கோ வடக்குப்பகுதியில் வெள்ளியன்று உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையான இன்றும் தீவிரத் தீ பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று காற்று பலமாக வீசவில்லை. இதனால் தீயணைப்புப் படைக்கு கொஞ்சம் சாதக நிலை ஏற்பட்டது. ஆனால், இன்று மணிக்கு 48 கி.மீ. வேகக் காற்று வீசும், குறிப்பாக நாபா மலைப்பகுதி மற்றும் சொனோனா கவுண்ட்டிகளில் வேகக் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 28,000 வீடுகள் மற்றும் பிற கட்டிடங்கள் அச்சுறுத்தலில் உள்ளன.
தீக்கனல்கள் உயிர்ப்புடன் உள்ளன, காற்று வீசினால் அது எரிபொருள் படுகைக்கு எளிதில் தீயைப் பரவவிடும். இது மிகப்பெரிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது என்று தீயணைப்புப் படை தலைவர் மார்க் பிரண்டன் தெரிவித்துள்ளார்.
காட்டுத் தீயின் மேற்குப் பகுதியில் காற்று பெரிய அளவில் வீசி வருகிறது. இதனால் கட்டுப்படுத்தும் பணிகள் பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளன.
5000 பேர் வசிக்கும் கேலிஸ்டோகா என்ற ஊரில் அதிக தீயணைப்பு வீரர்களும் சாதனங்களும் மீட்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பகுதிகளில் காட்டுத் தீயினால் வெப்ப அளவு கடுமையாக அதிகரித்துள்ளது, சான்பிரான்சிஸ்கோ குடாப்பகுதி முழுவதும் அடர்த்தியான புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.
நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயுவினால் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தினால் பெரிய பெரிய காட்டுத் தீ உருவாகும் என்று ஆய்வுகள் ஏற்கெனவே எச்சரித்தன. வானிலை மாற்றத்தினால் கலிபோர்னியா வறண்டு போகும் என்றும் இதனால் மரங்கள் மற்றும் பிற செடி கொடிகள் தீக்கு சாம்பலாகும் என்றும் விஞ்ஞானிகள் ஏற்கெனவே எச்சரித்தனர்.
சுமார் 25 பெரிய காட்டுத் தீ உயிர்ப்புடன் உள்ளது. கலிபோர்னியாவில் மட்டும் 17,000 தீயணைப்பு வீரர்கள் தீயுடன் போராடி வருகின்றனர்.
ஆகஸ்ட் 15 முதல் கலிபோர்னியாவில் சுமார் 40 லட்சம் ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. அதாவது 6000 சதுர மைல்கள் அல்லது 15,500 சதுர கி.மீ. பரப்பளவு எரிந்து சாம்பலாகியுள்ளன.
இது ஒரு வரலாற்றுத் தருணம். 40 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலாகும் தருணம் என்கின்றனர் கலிபோர்னியா அதிகாரிகள்.
80,000 பேர் வரை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர். இதுவரை 600 கட்டிடங்கள் 200க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.