

குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு 91 வயது.
“குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத்திற்கு கடந்த ஜூலை மாதம் திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குவைத்திலிருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று குவைத் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2006 ஆம் ஆண்டு முதல் குவைத்தின் மன்னராக ஷேக் சபா அல் அஹ்மத் ஆட்சி புரிந்து வந்தார். மேலும், அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கையை கடந்த 50 ஆண்டுகளாகக் கவனித்து வந்தார். சிரியாவில் நடந்த போரில் அதற்கு ஆதரவு தெரிவிக்காமல் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இந்த முடிவு காரணமாக பலராலும் பாராட்டப்பட்டார்.
மேலும், சவுதி அரேபியாவுக்கும், கத்தாருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட போதெல்லாம் மத்தியஸ்தம் செய்வதில் முக்கியப் பங்கு வகித்தவர் ஷேக் சபா.
இவர் மறைவைத் தொடர்ந்து அவரது ஒன்றுவிட்ட சகோதரரும் பட்டத்து இளவரசருமான ஷேக் நவாப் அல் அஹமத் புதிய மன்னராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளைகுடா நாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாளுமன்றத்தைக் கொண்டதாக குவைத் காணப்படுகிறது. மேலும் அங்கு ஆளும் அரசை விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது.