

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கரோனா தொற்று மூன்று மாதங்களுக்குப் பிறகு 20க்கும் கீழாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு கரோனா தொற்று மிகக் குறைந்த அளவில் பதிவாகியுள்ளது. 2.5 கோடி மக்கள்தொகை கொண்ட விக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியானது.
இந்த நிலையில் கரோனா தொற்று குறைந்தது என்றாலும், கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் எண்ணம் இல்லை என்று விக்டோரியா மாகாண அரசு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரே ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது. கரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 26,898 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,057 பேர் குணமடைந்துள்ளனர். 849 பேர் பலியாகி உள்ளனர்.