

பாகிஸ்தானில் ஒரு மாதத்திற்குப் பிறகு 700க்கு மேல் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானின் டான் ஊடகம் வெளியிட்ட செய்தியில், “பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 700 பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி 711 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஒரு மாதத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் கரோனா தொற்று 700-ஐக் கடந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக 500க்கும் குறைவாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து அங்கு 6 மாதங்களுக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்குத் திரும்பியுள்ளனர்.
பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்த இரண்டு மாகாணங்களிலும் தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளது.
முன்னதாக, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார அமைப்பு பாகிஸ்தானுக்கு பாராட்டுத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.