

ஈரானில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அங்கு நாடு முழுவதும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 144 பேர் பலியாகி உள்ளனர். 3,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் கரோனாவால் இதுவரை 23,952 பேர் பலியாகி உள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாம் தற்போது கரோனா பரவலின் உச்சத்தில் இருக்கிறோம். இதன் காரணமாகவே நாடு முழுவதும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.
ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.