

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து அங்கு 6 மாதங்களுக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் கல்வித்துறை அமைச்சகம் தரப்பில், “பாகிஸ்தானில் முதல் கட்டமாக, மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிகளுக்குத் திரும்பியுள்ளனர்.
உயர்நிலைப் பள்ளிகள் இரண்டாம் கட்டத்தில் திறக்கப்படும். ஆரம்பப் பள்ளிகள் மூன்றாம் கட்டத்தில் திறக்கப்படும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக 1000 பேருக்கும் குறைவாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் கரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி தளர்த்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து அறிவிப்பை பாகிஸ்தான் அரசு வெளியிட்டது.
பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்த இரண்டு மாகாணங்களிலும் தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளது.
முன்னதாக, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார அமைப்பு பாகிஸ்தானுக்கு சமீபத்தில் பாராட்டுத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.