

நேபாளத்தில் உள்நாட்டுப் போக்குவரத்தை இம்மாத இறுதியில் தொடங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நேபாளக் கலாச்சாரம் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை தரப்பில், “நேபாளத்தில் உள்நாட்டு விமானச் சேவை செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. மேலும், மாவட்டங்களுக்குள்ளாகவும் விமானப் போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் திங்கட்கிழமை 1,170 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 55,329 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.