

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 548 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை தரப்பில், “ பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 548 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 300,371 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக 1000 பேருக்கும் குறைவாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு உண்மையில் குறைந்துவிட்டதா? அல்லது மருத்துவப் பரிசோதனைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் காரணமாக தொற்று குறைவாகக் காணப்படுகின்றதா என சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.
முன்னதாக, பாகிஸ்தானில் கரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி தளர்த்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து அறிவிப்பை பாகிஸ்தான் அரசு வெளியிட்டது.
பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த இரண்டு மாகாணங்களிலும் தற்போது தொற்று குறைந்துள்ளது.