பத்திரிகையாளர் ஜமால் கொலை வழக்கு: ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ரத்து

பத்திரிகையாளர் ஜமால் கொலை வழக்கு: ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ரத்து
Updated on
1 min read

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் ஐந்து பேருக்கு வழங்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சவுதி அரசு ஊடகம் தரப்பில், “ கஷோகி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 5 பேரின் மரணத் தண்டனை ரத்து செய்யப்பட்டு, 20 ஆண்டுக்காலம் சிறைத் தண்டனை வழங்கி சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மூவருக்கு 7 முதல் 10 ஆண்டு கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தத் தீர்ப்பு தொடர்பான முழுமையான விவரம் இதுவரை வெளிவரவில்லை.

ஜமால் கஷோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.

மேலும், ஜமால் கொலை செய்யப்பட்டதின் பின்னணியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாகவும் கூறியது. ஜமால் கொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் ஜமாலின் மரணத்தில் சவுதி இளவரசருக்குப் பங்கு இருக்கிறது என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஜமால் மரணத்துக்கு சவுதி தலைவர் என்ற பொறுப்பில் நான் முழு பொறுப்பு ஏற்கிறேன். ஆனால் ஜமால் கொலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறேன் என்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in