

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு சீனா தரப்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட சிறிய கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக, கடந்த 10-ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இருப்பினும், பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டபின் ஆழ்ந்த கோமா நிலைக்குச் சென்றார். கடந்த 21 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று பிரணாப் முகர்ஜி காலமானார்.
இந்நிலையில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் டெல்லி லோதா எரியூட்டு மையத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே, பிரணாப் முகர்ஜி மறைவுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாங் யீ கூறும்போது, “இந்தியா - சீனா நட்புறவில் பிரணாப் முகர்ஜியின் இறப்பு பெரும் இழப்பாகும். பிரணாப் முகர்ஜி இந்தியாவின் மூத்த அரசியல்வாதி. அரசியலில் அவர் 50 ஆண்டுகாலம் பணியாற்றிவர். பிரணாப் முகர்ஜி சீனா-இந்தியா உறவுகளுக்குச் சாதகமான பங்களிப்புகளை வழங்கினார்” என்று தெரிவித்தார்.