

கரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் மாகாணத்தில் ஊரடங்குக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கூறும்போது,”ஆக்லாந்து மாகாணத்தில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் மாஸ்க் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். கரோனாவை கட்டுப்படுத்துவதில் எல்லோருடைய இணக்கமும் உதவியும் எங்களுக்குத் தேவை” என்று தெரிவித்தார்.
ஆக்லாந்தில் ஊரடங்கு நீக்கப்பட்டதுடன் அங்கு பள்ளிகள் திறக்கவும் நியூசிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தென் பசிபிக் கடலில் 22 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் நியூசிலாந்து தீவில் 100 நாட்களைக் கடந்து, கரோனா தொற்று இல்லாமல் மக்கள் வாழ்ந்து வந்தனர். இதற்காக சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு நியூசிலாந்து மக்களுக்கும், அதன் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்கும் வாழ்த்துத் தெரிவித்தது.
கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்திற்காக நியூசிலாந்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கம்போல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு சில நாட்களுக்கு முன்னர் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு கரோனா பரவத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து ஆக்லாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர்.
நியூசிலாந்தில் 1,738 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,500க்கும் அதிகமானவர்கள் குணமடைந்தனர். 22 பேர் பலியாகி உள்ளனர்.