

உலக முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 கோடியாக அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவில் மட்டும் 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வோல்டோ மீட்டர் வெளியிட்ட தரவுகளின்படி, “அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,981 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 369 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியுள்ளது. 1,87,226 பேர் பலியாகி உள்ளனர்.34 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் 7 லட்சத்துக்கு அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெக்சாஸ் மற்றும் புளோரிடாவில் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில், மீண்டும் அங்கு கரோனா பரவல் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் 2. 5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.