அமேசான் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான பிரேசில் மக்கள் பாதிப்பு

அமேசான் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான பிரேசில் மக்கள் பாதிப்பு
Updated on
1 min read

அமேசானில் பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக ஆயிரக்கணக்கானவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்று தன்னார்வ அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரேசிலில் இயங்கும் Human Rights Watch என்ற தன்னார்வ அமைப்பு 50 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “அமேசானில் பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 2,195 பேர் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 500 பேர் ஒரு வயதுக்கும் குறைவானவர்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 60 வயதைக் கடந்தவர்கள். 2020-ல் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது.

காடழிப்பை பிரேசில் திறம்படக் கட்டுப்படுத்தும் வரை, ஒவ்வொரு ஆண்டும் காட்டுத் தீ தொடரும் என்று எதிர்பார்க்கலாம். இது அமேசானின் அழிவை மேலும் அதிகரிக்கும். இதன் காரணமாக லட்சக்கணக்கான பிரேசில் மக்கள் சுவாசிக்கும் காற்று விஷமாகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரேசிலில் மழைக்காடுகள் அழிவதை தீவிரப்படுத்தி வருகிறார். இதற்கு எதிராக பிரேசில் பூர்வ பழங்குடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஜெய்ர் போல்சனாரோ பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் காட்டுத் தீ காரணமாக அமேசான் காடுகள் தீக்கு இரையாகின. அப்போது பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அமேசான் காட்டுத் தீயை அணைப்பதற்கு பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் உதவத் தயார் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், இதனை பிரேசில் அதிபர் நிராகரித்துவிட்டார். மேலும் அமேசான் காடுகள் எரிகிறது என்பது பொய் என்று அவர் தெரிவித்தார்.

பூமியின் நிலப்பரப்பில் வெறும் 6 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள அமேசான் காடு, பூவுலகின் தாவரங்கள், உயிரின வகைகளில் பாதியைக் கொண்டுள்ளன. உலகின் நுரையீரலாக அமேசான் காடுகள் உள்ளன. 40,000 தாவர இனங்கள், 1,300 பறவையினங்கள், 25 லட்சம் பூச்சியினங்கள் என மாபெரும் உயிரினப் பன்மை மையமாக அமேசான் திகழ்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in