

உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்திய பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ பெய்ரூட்டில் ஏற்பட்ட மோசமான வெடி விபத்து காரணமாக 6 மருத்துவமனைகள் பாதிப்புக்குள்ளாகின. 15 கிலோ மீட்டருக்கு இந்த வெடிப்பு தாக்கம் உணரப்பட்டது. மேலும் அப்பகுதியில் வசித்திருந்த 40% மக்கள் மிதமான பாதிப்பை சந்தித்தனர். மேலும் இந்த வெடிப்பு காரணமாக 120 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 50,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 50,000 குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் 200-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
மேலும், பெய்ரூட் வெடி விபத்தில், 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். முன்னதாக பெய்ரூட் வெடி விபத்துக்கு பொறுப்பேற்று லெபனான் அரசு பதவி விலகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே லெபனான் பொருளாதார பற்றாக்குறையை சந்தித்து வந்தது. இந்த நிலையில் பெய்ரூட்டில் ஏற்பட்ட இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் சரித்துள்ளது.