

வியட்நாமில் கரோனா பரவல் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் அங்கு 25 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வியட்நாம் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ வியட்நாமில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 25 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். வியட்நாமில் இதுவரை 905 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 20 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
வியட்நாமில் டா மாங் பகுதியில் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கரோனா தொற்று பரவ தொடங்கி இருக்கிறது.மேலும் டா மாங் பகுதியில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் கரோனா பரவலின் தீவிர தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 9 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட வியட்நாம், கரோனாவைக் கட்டுப்படுத்தி முன் உதாரணமாக இருந்தது
அது மட்டுமல்லாது வியட்நாமில் யாரும் சமூகத் தொற்றால் பாதிக்கப்படாமல் இருந்தனர். மேலும் கரோனாவால் எந்த உயிரிழப்பும் நிகழாமல் இருந்தது. இந்த நிலையில் 99 நாட்களுக்குப் பிறகு வியட்நாமில் மீண்டும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.