

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கரோனா வைரஸிலிருந்து சுமார் 70% மக்கள் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அர்ஜென்டினா சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “அர்ஜென்டினாவில் இதுவரை 2,41,811 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சுமார் 70% பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அர்ஜென்டினாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 4,556 பேர் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் கரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது. அங்கு 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொலம்பியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரு மற்றும் மெக்சிகோவில் கரோனா பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்துள்ளது. உலக அளவில் கரோனா பாதிப்பில் மெக்சிகோ 7-வது இடத்தில் இருந்தாலும், உயிரிழப்பில் 3-வது இடத்தில் உள்ளது.
சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.