

பிரிட்டனில் பொதுவெளியில் முகக்கவசம் அணியாமல் இருக்கும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் கரோனா தொற்று சற்று குறைந்த நிலையில், அங்கு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கரோனா தொற்று பரவாமல் இருக்க, பொதுமக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளது பிரிட்டன் அரசு.
இதுகுறித்து பிரிட்டன் ஊடகங்கள் தரப்பில், “சூப்பர் மார்க்கெட், தபால் நிலையங்கள், பொதுப் போக்குவரத்து, வங்கிகள் ஆகியவற்றுக்கு பிரிட்டன் மக்கள் வரும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். இதனை மீறுபவர்கள் கடையிலிருந்து வெளியேற்றப்படுவதுடன், 100 பவுன்ஸ் அபராதமும் விதிக்கப்படும். மேலும், மூன்று வயதுக்குக் குறைவாக உள்ள குழந்தைகள் முகக்கவசம் அணியத் தேவையில்லை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்தின் மத்தியில் பிரிட்டனில் கரோனா பரவல் நீங்கும் என்றும், எனினும் இரண்டாம் கட்டப் பரவல் குறித்த அச்சம் இருப்பதாகவும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.