

ஈரானில் 2019-ம் ஆண்டில் நடந்த எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த மூன்று இளைஞர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இந்த நிலையில் ஈரானில் இளைஞர்களுக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்யுமாறு சமூக வலைதளத்தில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து சர்வதேச தன்னார்வ அமைப்பான ஆம்னெஸ்டி வெளியிட்ட செய்தியில், “ஈரானில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த அமிர் ஹிசன், சயித், முகமத் ரஜாபி என்ற மூவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. மேலும், அவர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாயினர். அவர்களுக்கு மின்சாரம் பாய்ச்சப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இளைஞர்களுக்கு ஆதரவாகப் பலரும் தங்கள் ஆதரவைப் பதிவுகளாக வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக, அமெரிக்காவின் தொடர் பொருளாதாரத் தடை காரணமாக ஈரான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது.
இதனைத் தொடர்ந்து ஈரானில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஈரான் அரசின் இந்த முடிவுக்கு ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியும் ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் எரிபொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து ஈரானில் ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.