

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மதுபான விடுதிகள், முடித்திருத்த நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், அருங்காட்சியகங்கள் போன்றவை மீண்டும் மூடப்பட்டுள்ளன. உணவு விடுதிகளில் அமர்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை கலிபோர்னியா கவர்னர் கெவின் நியுசோம் வெளியிட்டுள்ளார். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அம்மாகாண அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்தப் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “கலிபோர்னியாவில் தற்போது தொற்று எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் கரோனா பரவலைத் தடுக்க கடற்கரைகள், பூங்காக்கள் என மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மூடப்பட்டன.
உள்ளரங்குகளிலிருந்தும் கரோனா பரவல் அதிகமாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து கலிபோர்னியா அரசு அதன் தடுப்பு நடவடிக்கைகளில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
வீட்டிலிருந்து வெளியே வரும்போது முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் பொதுமக்களின் அலட்சியம் குறித்து கவர்னர் கெவின் நியுசோம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவர்னர் கெவின் நியுசோம் கூறும்போது, “கரோனா இப்போதைக்கு ஓயப் போவதில்லை. அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையில் கரோனா நீடிக்கும். எனவே, பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். இது மிக அடிப்படையானது. ஆனால், பெரும்பாலானோர் இந்த அடிப்படை விதிமுறைகளைக் கூட கடைப்பிடிப்பதில்லை’’ என்று கூறினார்.
அமெரிக்காவில் இதுவரையில் 34.3 லட்சம் பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். 1.38 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.