ஈரானில் கரோனா பலி 11,731 ஆக அதிகரிப்பு

ஈரானில் கரோனா பலி 11,731 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

ஈரானில் கரோனாவிற்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 11,731 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 160 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 11,731 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 2,613 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானில் இதுவரை 2,43,051 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் சுமார் 31 மாகாணங்களில் கரோனா தொற்றுப் பரவல் உள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலையில் ஈரான் தலைநகரில் மட்டும் 20 சதவீதம் பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ஈரான் கரோனா தடுப்புப் பணிக்குழுவின் தலைவர் அலிரேஸா சாலி முன்னரே தெரிவித்திருந்தார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஊரடங்குத் தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in