

கரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவிலிருந்து அமெரிக்காவை மீட்க ஆக்கபூர்வமான ஆலோசனைகளைத் தந்தமைக்காக, தமிழரான பத்மஸ்ரீ ராஜ் செட்டிக்கு அமெரிக்காவிலுள்ள கார்நிஷ் கார்ப்பரேஷன் நிறுவனம், ‘சிறந்த குடியேறி’ விருது வழங்கிக் கவுரவித்திருக்கிறது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான நடராஜ் செட்டியார் எனும் ராஜ் செட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள புதுவயலைப் பூர்விகமாகக் கொண்டவர். இவரது தந்தையார் கருப்பன் செட்டி டெல்லியில் புள்ளியியல் துறையில் பணியாற்றியவர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பொருளாதார ஆலோசகராகவும் இருந்தவர். கருப்பன் செட்டியின் மனைவி அன்புக்கிளி ஆச்சி காரைக்குடியில் பிறந்தவர். செட்டியார் சமூகத்தின் முதல் பெண் மருத்துவர் என்ற புகழுக்குச் சொந்தக்காரர். டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவராகப் பணியாற்றியவர்.
ராஜ் செட்டி தனது ஆரம்பக் கல்வியை டெல்லியில் முடித்தார். அதன் பிறகு பெற்றோர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்ததால் தனது 8 வயதில் அமெரிக்காவுக்குப் புறப்பட்டார். அங்கே கல்லூரிப் படிப்பை முடித்து 23-வது வயதில் பெர்லி பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். தனது 28-ம் வயதில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைப் பேராசிரியராக தன்னை உயர்த்திக் கொண்ட ராஜ் செட்டி, இளம் வயதில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஆனவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். இவரது மனைவி சுந்தரி ஸ்டெம்செல் ஆராய்ச்சியாளராக இருக்கிறார்.
கடந்த 2012-ம் ஆண்டு 5 லட்சம் டாலர் ஜீனியஸ் கிராண்ட், 2013-ல் பேபி நோபல் பரிசு என அழைக்கப்படும் John Bates Clark Medal, 2015-ல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது ஆகியவற்றால் கவுரவிக்கப்பட்ட ராஜ் செட்டி, அமெரிக்காவின் மிகச் சிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் தலைசிறந்த 10 பொருளாதார மேதைகளில் ஒருவராகக் கருதப்படும் டாக்டர் ராஜ் செட்டிக்கு, கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து அமெரிக்காவை மீட்பதற்கான வழிமுறைகளைக் கூறியதற்காக, ‘சிறந்த குடியேறி விருது’ வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள கார்நிஷ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் இந்த விருது அமெரிக்க சுதந்திர தினமான கடந்த 4-ம் தேதி ராஜ் செட்டிக்கு வழங்கப்பட்டது.
உயிரியல் அறிஞரான பத்மஸ்ரீ சித்தார்த் முகர்ஜி என்ற இந்தியருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.