

இலங்கையில் மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.
பல நாடுகளில் இன்றளவும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொருளாதாரத் தேவைகளுக்காக சில நாடுகள் ஊரடங்கில் தளர்வுகளை அமல்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் கரோனா பாதிப்பிலிருந்து சற்று மீண்டுள்ள இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் 115 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இலங்கை கல்வி அமைச்சகத்தின் துணைச் செயலாளர் ரஜ்தித் சந்திரசேகரா கூறும்போது, “மாணவர்களுக்கு சளி, காய்ச்சல் இருந்தால் பள்ளிகளுக்கு அனுப்புவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். மாணவர்களை பள்ளிக்குள் மாஸ் அணிவதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால், வெளியே பயணம் மேற்கொள்ளும்போது மாஸ்க் அணியுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்” என்றார்.
மேலும், கோவிட்-19 பரவலைத் தடுக்கும் அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளோம்.
இலங்கையில் இதுவரை கரோனா தொற்றால் 2,076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் பலியாகி உள்ளனர். 1,903 பேர் குணமடைந்துள்ளனர்.