

எகிப்தில் விமான நிலையங்கள், அருங்காட்சியகம், பிரமிடுகள் ஆகியவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எகிப்து ஊடகங்கள் தரப்பில், ”எகிப்தில் விமான நிலையம், அருகாட்சியகங்கள், உலக பிரசித்து பெற்ற கிசா பிரமிடுகள் ஆகியவை மூன்று மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.
கெய்ரோ விமான நிலையத்திலிருந்து 2,000 பயணிகளுடன் 14 சர்வதேச விமானங்கள் புறப்பட்டன. மேலும் உக்ரைன் சுற்றுலா பயணிகளும் விமானம் மூலம் எகிப்து வந்தடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் ஒருப்பக்கம் இருந்தாலும், எகிப்து அரசு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
எகிப்து தலைநகர் கெய்ரோவிலும், மற்றொரு முக்கிய நகரமான கிசாவிலும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனைத் தடுக்கும் நடவடிக்கையில் எகிப்து அரசு ஈடுபட்டுள்ளது.
முன்னதாக, கருவுற்றிருக்கும் சமயத்தில் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி சில காரணங்களால் சற்று குறையக்கூடும், அதன் காரணமாக கரோனா தொற்றுக்கு அவர்கள் எளிய இலக்காக மாறக்கூடும் என்பதால் தற்சமயம் கருவுறுதலைப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று எகிப்து சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
9.9 கோடி மக்கள்தொகை கொண்ட எகிப்தில் இதுவரையில் 68,311 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 18,460 பேர் குணமாகியுள்ள நிலையில் 2,953 பேர் பலியாகியுள்ளனர்.