

இந்தியாவைப் பற்றி நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளி விமர்சித்தது அரசியல் ரீதியாகவும், ராஜங்கரீதியாகவும் முறையல்ல. இரு நாட்டு உறவை மோசமாக்கும்,. ஆதாரமில்லாத குற்றச்சாட்டு கூறிய அவர் பதவி விலக வேண்டும் என்று ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர்.
குறிப்பாக நேபாள முன்னாள் பிரதமர் புஷ்மா கமால் தஹல் பிரச்சண்டாவும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளி கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா மீது மறைமுகமாக குற்றச்சாட்டு வைத்தார். இந்தியா எனப் பெயரைக் குறிப்பிடாமல் தன்னை பதவியிலிருந்து நீக்குவதற்கு அன்னிய நாட்டு சக்திகள் முயல்கின்றன. பல்வேறு தூதரகங்கள், ஹோட்டல்கள் மூலம் தங்கியிருப்பவர்கள் உள்நாட்டு தலைவர்களுடன் சேர்ந்து கொண்டு என்னை பதவி நீக்கம் செய்ய முயல்கிறார்கள் என்று பகீர் குற்றச்சாட்டு கூறியிருந்தார்.
நேபாளம் சமீபகாலமாக இந்தியாவுடன் மோதல் போக்கையும், சீனாவுடன் நெருக்கத்தையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் எல்லைப் பகுதியான கலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளை தன்னுடைய நிலப்பகுதி எனக் கூறி அதை வரைப்படத்தில் சேர்த்து, அதை நாடாளுமன்றத்தில் திருத்தி தாக்கல் செய்து நிறைவேற்றியது.
நேபாளத்தின் இந்த செயலை இந்தியா கடுையாகக் கண்டித்தது. நேபாளத்தின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது, செயற்கையாக தனது நிலப்பகுதியை விரிவுபடுத்த நேபாளம் முயல்கிறது என்று மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.
கடந்த மே 8-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் தார்ச்சுலாவிலிருந்து லிபுலேக் பகுதியை இணைக்கும் 80 கி.மீ சாலையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். அதன்பின் இந்தியாவுடன் தீவிரமான மோதல் போக்கை நேபாளம் கையாண்டு வருகிறது
இந்நிலையில் நேபாள பிரதமர் சர்மா ஒளி இந்தியாவின் மீதும் மறைமுகமாகக் குற்றம்சாட்டியது இரு நாட்டு உறவுகளில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
இதையடுத்து, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரமிக்க நிலைக்குழுக் கூட்டம் நேற்று பலுவட்டார் நகரில் நடந்தது. அப்போது முன்னாள் பிரதமர் பிரச்சண்டா, பிரதமர் சர்மா ஒளி, உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் நேபாள பிரதமர் ஒளியின் பேச்சை முன்னாள் பிரதமர் பிரசண்டா கடுமையாகக் கண்டித்தார்.
அப்போது அவர் பேசுகையில் “ பிரதமர் ஒளி கடந்த இரு நாட்களுக்கு முன் இந்தியா மீது கூறிய குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாகவும் முறையானது அல்ல, ராஜங்கரீதியாகவும் சரியானது அல்ல. இதுபோன்று பிரதமராக இருந்து கொண்டு ஒருவர் பேசுவது இந்தியாவுடன் நமக்கிருக்கும் நட்புறவை மோசமாக்கிவிடும். அவர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் “ என வலியுறுத்தினார்
இதைக் கருத்தை ஆளும் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் மாதவ் குமார் நேபாள், ஜால்நாத் கானல், பாம்தேவ் கவுதம், நாராயண்காஞ்ச் ஸ்ரீஸ்தா ஆகியோர் கூறினர், அதுமட்டுமல்லாமல் இந்தியா மீது கூறிய குற்றச்சாட்டுக்கு எதிராக ஏதேனும் ஆதாரம் வைத்திருக்கிறார்களா என்று பிரதமர் ஒளியிடம் கேள்வி எழுப்பினார்கள், இல்லாவிட்டால் பதவியைவிட்டு விலகுகங்கள் என்று வலியுறுத்தினர்.
மேலும், கூட்டத்தில் பேசிய ஆளும் கட்சியின் மூத்த தலைவர்கள், “ அரசியல்உறவுக்கு மாறாக, நிர்வாகரீதியில் தவறாகவும் பேசிய பிரதமர் ஒளி தார்மீகப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கட்சியில் உள்ள நிலைக்குழுவில் பிரதமருக்கு ஆதரவு குறைந்துவிட்டது 57 உறுப்பினர்கள் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோருகின்றனர்” என வலியுறுத்தினர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த பிரதமர் சர்மா ஒளி, மூத்த தலைவர்கள் கேட்ட கேள்விக்கு எந்தவிதமான பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தார்.இதனால் நேபாளத்தில் விரைவில் அரசியல் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டு நேபாள பிரதமராக இருந்த சர்மா ஒளி, நம்பிக்கை வாக்கெடுப்பில் மாவோயிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்காததால், பதவியை ராஜினாமா செய்தார். இப்போது கட்சிக்கும், ஆளும் அரசுக்கும் முறையான உறவை பிரதமர் ஒளி பராமரிப்பதில்லை, எதையும் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது