

ஆஸ்திரேலியாவில் கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவு ஒரே நாளில் அதிகபட்ச தொற்று பதிவாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை அதிகம் கொண்ட மாகாணங்களில் ஒன்றான விக்டோரியாவில் கடந்த 10 நாட்களாக இரட்டை இலக்க எண்களில் கரோனா பரவல் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 33 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இங்கு சுமார் 270 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. மேலும் கடந்த 10 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் மீண்டும் கரோனா பரவல் தொடங்கியுள்ள நிலையில், அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் மீண்டும் கரோனா பரவல் குறித்து பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறும்போது, “நாம் கரோனாவுடன் வாழ வேண்டும். அது எங்கும் செல்லவில்லை. நாம் தொடர்ந்து முன்னேற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அங்கு கரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் 7,500 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 104 பேர் பலியாகி உள்ளனர்.