

இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா மட்டுமே 2 கோடி மக்களின் உயிர்களைப் பறிகொடுத்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின், மீண்டும் அப்படியொரு போர் உலகில் தோன்றிவிடக் கூடாது என்பதற்காகவும் உலகமே ஒரு சமுதாயமாக இயங்க நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஒருங்கிணைப்பும் புரிந்துணர்வும் அவசியம் என்பதையும் பெரும்பாலான உலக நாடுகள் உணர்ந்தன.
இவற்றையே நோக்கமாகக் கொண்டு 1945-ம் ஆண்டு 51 நாடுகள் உறுப்பினராக ஓரணியில் திரண்டு உருவாக்கிய அமைப்பே ஐக்கிய நாடுகள் சபை. இந்தியா உட்பட இன்று அதில் 193 நாடுகள் உறுப்பினராக உள்ளன. நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள ஐ.நா.பொதுச்சபை உதவுகிறது. இதனால் ஆண்டுதோறும் நடத்தப்படும் பல்வேறு விதமான கூட்டங்களில் பங்கேற்க ஐ.நா.தலைமையகத்துக்கு உலக நாடுகளின் சார்பில் பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
அதேபோல ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டு உரையாற்றும் விவாதிக்கும் ‘உயர்மட்ட பொது அவை விவாதக் கூட்டம்’ நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, கரோனா பேரிடர் காலத்துக்கு நடுவே, ஐ.நா.வின் 75-வது உயர்மட்ட பொது அவை விவாதக் கூட்டம், வரும் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.
ஆனால், கடந்த 75 ஆண்டுகால ஐ.நா.பொதுச்சபை வரலாற்றில் முதல் முறையாக, உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்காத இக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதை, ஐ.நா. பொது அவைக் கூட்டத்தின் தலைவர் ஜனி முகமது பாந்தி நியூயார்கில் இருந்தபடி இணையவழியில் சர்வதேச ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது உரையாடினார். அப்போது அவர் “உலகத் தலைவர்கள் ஐ.நா. பொதுச் சபைக்கு வருவது என்றால் தனியாக வர முடியாது. எனவே இக்கூட்டத்தில் அனைத்து உலகத் தலைவர்களும் நேரில் பங்கேற்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.” என்றார்.
மேலும் கூறிய அவர், “அதேநேரம் தள்ளிப்போடமுடியாத அவசியத்துடன் கட்டாயம் நடைபெற வேண்டிய இப்பொது விவாதக் கூட்டம், கரோனா வைரஸ் தொற்றுக்கு இடங்கொடுக்காத கட்டுப்பாடுகளுடன் இணக்கமான வடிவத்தில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள் பங்கேற்க முடியாது போனாலும் குறைந்தது நூறு பேரை அனுமதிக்க முடியுமா என்று ஆராய்ந்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.