

இந்தியாவில் கரோனா வைரஸ் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் நிபுணர்களில் ஒருவரான மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக இந்தியாவில் ஒரு நாளில் மட்டும் 9,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவில் கரோனா தொற்றுக்கு இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் கரோனா அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் நிபுணர் மைக்கேல் ரியான் கூறும்போது, “இந்தியா ஊரடங்கைத் தளர்த்தினால் அபாயக் கட்டத்தை அடையும்.
இந்தியாவில் தொற்றுநோய் பயணத்தின் திசை அதிவேகமானதாக இல்லை. ஆனால், அது அதிகரித்து வருகிறது. தொற்றுநோயின் தாக்கம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வேறுபட்டுள்ளது. கரோனா தாக்கம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற அமைப்புகளுக்கு இடையில் வேறுபடுகிறது. இந்தியா மட்டுமல்ல மக்கள்தொகை அதிகம் கொண்ட பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இதே நிலைதான்” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா தொற்றால் 68,50,612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,98,244 பேர் பலியாகி உள்ளனர். 33,51,249 பேர் குணமடைந்துள்ளனர்.