

கரோனா வைரஸால் பல்வேறு நாடுகள் சவால்களைச் சந்திக்கும் நிலையில் இந்திய அரசு கரோனா பாதிப்பை வாய்ப்பாகப் பயன்படுத்தி தங்களின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தை மக்களிடையே ஆழமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
கரோனாவால் உலக அளவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலியைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 642 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இந்தியாவில் கரோனா வைரஸ் அதிகரித்து வருவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு டெட்ராஸ் அதானம் பதில் அளித்ததாவது:
''இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது துரதிர்ஷ்டம்தான். உலக நாடுகளுக்கும் கரோனா பெரும் சவாலாக மாறியுள்ளது. கரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கும் வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். இந்தியாவில் அந்நாட்டு அரசு மக்களுக்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
கரோனா வைரஸ் பரவும் இந்தக் காலகட்டத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி மக்கள் அனைவருக்கும் அந்தக் காப்பீட்டைக் கொண்டுசெல்ல வேண்டும். அடிப்படை மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் காப்பீட்டைக் கொண்டு செல்வதில் இந்திய அரசு தீவிரமாக இருக்கிறது என்பதை அறிவோம்.
கரோனா பாதிப்பு இருக்கும் நாடுகளில் உள்ள மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதோடு கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
கரோனா பரவல் அதிகமாக இருக்கும் இடங்களில் இருக்கும் மருத்துவமனைகளில் பணியாற்றுவோர் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா வைரஸ் நோயாளிகளைக் கவனிக்கும் சுகாதாரப் பணியாளர்கள் மட்டும் அணிய வேண்டும் என்றில்லாமல் அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிய வேண்டும்.
உதாரணமாக இதயநோய்ப் பிரிவுக்கு ரவுண்ட்ஸ் செல்லும் மருத்துவர் அங்கு கரோனா நோயாளிகள் இல்லாவிட்டால் கூட அங்கு அவர் முகக்கவசம் அணிந்து செல்லுல் நலம்.
அதுமட்டுல்லாமல் சமூகப்பரவல் இருக்கும் இடங்கள், அதற்கு வாய்ப்புள்ள இடங்களில் மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மக்கள் அனைவரையும் முகக்கவசம் அணிய அரசுகள் ஊக்கப்படுத்த வேண்டும்.
சமூக விலகல் என்பது சில நேரங்களில் கடைப்பிடிக்க முடியாத சூழலில் முகக்கவசம் கட்டாயமாக்க வேண்டும். முகக்கவசத்தில் குறைந்தபட்சம் மூன்று அடுக்குகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு துணியும் வெவ்வேறு தரத்தில் இருத்தல் வேண்டும். சமூக விலகல் சிலநேரம் கடைப்பிடிக்க முடியாத நிலையில் முகக்கவசம், கைகளை சானிடைசர் மூலம் சுத்தப்படுத்துதல் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்''.
இவ்வாறு டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்.