

தென்னாப்பிரிக்காவில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது என்று கூற முடியாது. இருப்பினும் தீவிரமான பரவலோ, சமூகத் தொற்றோ அங்கே ஏற்படவில்லை என்று தென்னாப்பிரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்த செய்தியை நீங்கள் வாசிக்கும் இந்தத் தருணத்தில் 6336 பேர் கரோனாவால் அங்கே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 123 பேர் கரோனாவால் மரணமடைந்துள்ளனர். மற்ற நாடுகளைப்போலவே தென்னாப்பிரிக்காவிலும் ஊரடங்கு அமலில் இருக்கிறது.
இதற்கிடையில் மக்கள் அங்கே உணவுக்காகப் பல கிலோமீட்டர்கள் வரிசையில் நிற்கும் காட்சியை ட்ரோன் வீடியோ மூலம் காட்டியுள்ளது ‘ராய்ட்டர்’ செய்தி நிறுவனம். அந்நாட்டின் தலைநகரான பிரிடோரியாவின் புறநகர்ப் பகுதிகளில் சுமார் இரண்டரை லட்சம் குடியேறிகள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருமே கறுப்பின மக்கள்தான் என்றாலும் ஜிம்பாவே போன்ற நாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்.
கரோனா ஊரடங்கால் வேலைகள் அனைத்தும் முடங்கிவிட்ட நிலையில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்குப் பல தொண்டு நிறுவனங்கள் அன்றாடம் உணவளித்து வரும் அதேநேரம் அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் அடங்கிய பைகளையும் கொடுத்துவருகின்றன. இவற்றை வாங்குவதற்காக நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்வதைக் காணொலி வழியாக இங்கே காணுங்கள்.