

கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து பரவியது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 200க்கு அதிகமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்திருக்கும் வேளையில் சீனா கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது.
இந்த நிலையில் கரோனா வைரஸை பரப்பியது சீனாதான் என்று அமெரிக்காதொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறது. சீனாவிலுள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டை ட்ரம்ப் முன்வைத்தார். அது தொடர்பாக அமெரிக்கக் குழு வூஹான் ஆய்வகத்தை சோதனை செய்ய சீனா அனுமதிக்க வேண்டும் என்று ட்ரம்ப் கேட்டுக்கொண்டார். ஆனால், அமெரிக்காவின் கோரிக்கையை சீனா மறுத்துவிட்டது.
ஆனால் சீனாவிலுள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் பேசியதாவது, “சீனாவிலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியது என்று எங்களுக்கு தெரியும்.வூஹான் நகரிலிருந்து கரோனா வைரஸ் பரவியது எங்களுக்கு தெரியும்.ஆனால் சினாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்து கரோனா வைரஸ் பரவியது என்பதற்கான ஆதாரம் இல்லை “ என்று கூறியுள்ளா்.