

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் யுகேவில் மூன்று வாரங்ககளுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து யுகே வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டோம்னிக் ராப் கூறும்போது, “தற்போதுள்ள சூழலில் இயல்பு நிலைக்குத் திரும்புவது சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் என இரண்டையும் பாதிக்கும் என்று அவசர நிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. எனவே, இந்த ஆலோசனைப்படி யுகேவில் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
யுகேவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக யுகே சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலிறுத்தியுள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் பரவிய கரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்றுக்கு அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 21, 83,692 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1, 46,870 பேர் பலியாகியுள்ளனர்.