

ஆஸ்திரிய-ஹங்கேரிய எல்லைப்பகுதியில் அழுகிய நிலையில் 71 சடலங்களுடன் லாரி ஒன்று தனித்துவிடப்பட்டதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த லாரி குளிரூட்டப்பட்ட லாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த லாரியின் நம்பர் பிளேட்டில் ஹங்கேரிய எண் பதிவாகியிருந்தது. இவர்கள் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என்று ஹங்கேரிய போலீஸ் சந்தேகிக்கிறது.
வியன்னா நோக்கிச் செல்லும் ஏ-4 நெடுஞ்சாலையில் இந்த லாரி கைவிடப்பட்ட நிலையில் நின்று கொண்டிருந்ததையடுத்து வியாழக்கிழமையன்று சம்பவ இடத்துக்கு வந்த ஹங்கேரிய போலீஸ் இந்த உடல்கள் 2 நாட்களுக்கு முன்னால் உயிரிழந்தவையாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
ஆனால் உடல்களின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப் படவில்லை, எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இவர்கள் என்பதும் இன்னமும் தெரியவில்லை.
ஹங்கேரியிலிருந்து ஆஸ்திரியாவுக்குள் நுழையும் போதே, அதில் இறந்த உடல்களே இருந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த லாரியில் ஸ்லோவேகியாவின் கோழி இறைச்சி நிறுவனமான ஹைசாவின் லோகோ காணப்பட்டுள்ளது. விசாரணையில் அந்த லாரியை அந்த நிறுவனம் விற்று விட்டதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் லாரியை வாங்கியவர்கள் ஹைசா நிறுவன லோகோவை அகற்றவில்லை.
இந்நிலையில் லாரி ஓட்டுநரை இன்று ஹங்கேரிய போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் ருமேனிய நாட்டைச் சேர்ந்தவர். மேலும் இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தீவிர விசாரணைக்குப் பிறகு இந்த மர்ம முடிச்சு அவிழ்க்கப்படும் என்று ஹங்கேரிய போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த லாரி கடத்தல் கும்பலுக்கு சொந்தமானது என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லாரியில் இருந்தவர்கள் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று ஆஸ்திரிய போலீஸ் சந்தேகிக்கிறது. 71 பேர்களில் 59 பேர் ஆண்கள், 8 பெண்கள், 4 குழந்தைகள் அடங்கும் என்று ஆஸ்திரிய போலீஸ் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களிடம் சிரியா நாட்டைச் சேர்ந்த ஆவணம் ஒன்று கிடைத்துள்ளது, ஆனால் அதற்குள் அவர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்ற முடிவுக்கு வர முடியவில்லை என்கின்றனர் போலீஸார்.
போர் மற்றும் உள்நாட்டு யுத்தங்கள், பொருளாதார வீழ்ச்சி மற்றும் பின்னடைவுகள் காரணமாக ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு புலம் பெயர்வோர் எண்ணிக்கை கடந்த மாதம் மட்டும் 107,500 என்று ஐநா தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. கிரீஸிலிருந்து மேஸிடோனியாவுக்கு புலம்பெயரும் அகதிகள் எண்ணிக்கையை நாளொன்றுக்கு 3000 என்கிறது மற்றொரு புள்ளிவிவரம்.
கடந்த செவ்வாயன்று சிரியாவிலிருந்து அகதிகளை ஏற்றி வந்த லாரியை ஆஸ்திரிய போலீஸார் மடக்கியுள்ளனர். சிரியாவிலிருந்து ஐரோப்பிய யூனியனுக்கு கடத்தி வரப்பட்ட நபர்களில் 10 சிறு குழந்தைகளும் இருந்ததாகத் தெரிகிறது. முழுதும் மூடப்பட்ட காற்றுப் புக முடியாத வேனில் இவர்களை அழைத்து வந்ததால் மூச்சுத் திணறியதாக அகதிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது 71 உடல்களுடன் மர்மமான முறையில் லாரி பிடிபட்டுள்ளது, ஆட்கடத்தல் என்ற அடியாழ விவகாரத்தின் ஒரு முகடே என்று கூறப்படுகிறது.