

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் தாங்கள் அந்தத் தொற்றுக்கு ஆளாகிவிட்டதைக் கண்டுபிடிக்க ரத்தப் பரிசோதனை மூலம் மட்டுமே அறிய முடியும் என்ற நிலையில் மற்றொரு வழியையும் ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
அதாவது கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டவுடன் அவர் முதலில் வாசனையை நுகரும் திறனை இழந்துவிடுவார் அல்லது சுவையை அறியும் திறனை இழந்துவிடுவார் என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தென்கொரியா, இத்தாலி, சீனா போன்ற கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் கரோனாவில் பாதிக்கப்பட்ட மக்கள் பலருக்கும் அறிகுறிகள் ஏற்பட்டவுடன் வாசனை நுகரும் திறன் அல்லது சுவையை அறியும் திறன் குறைந்தும், சிலருக்கும் இல்லாமலும் போய்விட்டது என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
உலகத்தை ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கரோனா வைரஸின் தாக்கத்துக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டியுள்ளது, 3.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் அவருக்கு முதலில் சாதாரண காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல், இருமல், மூச்சுவிடுதலில் சிரமம், வயிற்றுப்போக்கு போன்ற அறிகள் படிப்படியாக வரத் தொடங்கும் 14 நாட்களில் இந்த அறிகுறிகள் தீவிரமாகும் என்று பொதுவாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், ஒருவருக்கு ரத்தப் பிரசோதனை செய்தால் மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதைக் கண்டறிய முடியும்.
ஆனால் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளுடன் மிக முக்கியமான அறிகள் ஏற்படும் என்பதை மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
இங்கிலாந்தின் காது,மூக்கு, தொண்டை டாக்டர்கள் குழுவின் அமைப்பான பிரிட்டிஷ் ரினோலிஜிக்கல் சொசைட்டி (British Rhinological Society and of ENT UK) ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “ கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முதலில் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்படும் முன் வாசனைகளை நுகரும் திறன் அல்லது சுவையை உணரும் திறனை இழந்துவிடுவார்.
சுவாசம் தொடர்பான பிரச்சினையில் வாசனைகளை அடையாளம் கண்டு உணரும் திறனை இழத்தல் என்பது புதிதானது அல்ல என்றாலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு தீவிரமாக இருக்கும். சில நேரங்களில் அறிகுறிகள் தென்பட்டு மீண்டும் சுவையை உணரும் திறன், வாசனையை உணரும் திறன் வந்துவிடலாம். மற்ற அறிகுறிகள் நீங்கும்போது இந்த இரு அறிகுறிகளும் தொடர்ந்து நீடிக்கும்.
தென்கொரியா, சீனா, இத்தாலி ஆகிய நாடுகளில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலில் வாசனைகளை நுகரும திறன் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் தென் கொரியாவில் 30 சதவீதம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவை மற்றும் வாசனைகளை நுகரும் திறன் பாதிக்கப்பட்டது.
ஒருவேளை கரோனாவால் பாதிக்கப்பட்டு எந்தவிதமான அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல், போன்றவை இல்லாமல் இருந்து இதுபோன்ற சுவை மற்றும் வாசனையை உணரும் திறன் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல அமெரிக்க அகாடமி ஆஃப் ஓட்டோலார்ஜோலாஜி ஹெட் அன்ட் நெக் சர்ஜரி அமைப்பும் (American Academy of Otolaryngology-Head and Neck Surgery) இதே கருத்தை தனது இதழில் பதிவிட்டுள்ளது. அதில், “கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் ஒருவருக்கு வாசனைகளை அறியும் திறன் மட்டுமல்லாது, சுவையை உணரும் திறனும் படிப்படியாக இழப்பார் . ஆதலால் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு மற்ற அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இல்லாத சூழலில் இந்த இரு அறிகுறிகளும் இருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியம்” எனத் தெரிவித்துள்ளது
அதேசமயம், உலக சுகாதார அமைப்பின் மருத்துவ ஆய்வாளர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், “கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாசனை, சுவை அறியும் திறன் குறையும் அல்லது இல்லாமல் போகும் என்ற கருத்து மருத்துவர்கள் மத்தியில் இருக்கிறது. இது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.