

கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து பிரான்ஸில் பொது இடங்களில் 1000க்கும் அதிகமானவர்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் அரசுத் தரப்பில், “பிரான்ஸில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பொது நிகழ்ச்சிகளில் 1000 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்வுகளில் 5,000க்கும் அதிகமானவர்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரான்ஸில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
பிரான்ஸில் இதுவரை 1,126 பேர் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பலி எண்ணிக்கை 3,042 ஆக அதிகரித்துள்ளது.