

அமெரிக்காவில் கரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் மருத்துவ சிகிச்சைக்காகவும் 8.3 பில்லியன் டாலர்களை அமெரிக்கா ஒதுக்கீடு செய்தது. இதற்கான அவசர நிதித் தொகுப்புச் சட்டத்தில் அதிபர் ட்ரம்ப் இன்று கையெழுத்திட்டார்.
சீனாவின் ஹூபே மாநிலம், வூஹான் நகரை மையமாக வைத்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இதுவரை சீனாவில் மட்டும் 3,400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் 91 நாடுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸைத் தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சீனாவுக்கு அடுத்தபடியாக தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 329 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை 15 உயிரிழந்துள்ளனர். இதனைத் தடுக்க அமெரிக்க நாடாளுமன்றம் புதிய அவசர நிதி ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இதுகுறித்து சினுவா செய்தி ஊடகம் கூறியுள்ளதாவது:
''அமெரிக்காவில் கோவிட்-19 காய்ச்சல் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 8.3 பில்லியன் டாலரை ஒதுக்கீடு செய்து, அவசர நிதித் தொகுப்புச் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
நிதித் தொகுப்பை அங்கீகரிக்கும் சட்டத்திற்கான மசோதாவுக்கு பிரதிநிதிகள் சபையின் இரு கட்சிகளும் ஒப்புதல் அளித்தன. அதனைத் தொடர்ந்து, ட்ரம்ப் இந்த சட்ட மசோதாவில் கையெழுத்திட்டார்.
இந்த மசோதா வைரஸை பரிசோதிப்பதற்கான நிதியை அதிகரிக்கும். தடுப்பூசிகள் வழங்குவதற்கான சேவைகளை அதிகரிக்க உதவும். அத்துடன் மருத்துவ சிகிச்சைகளுக்கான குறைந்த செலவுகளையும் வழங்கும்''.
இவ்வாறு சினுவா செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.