பூமி உருண்டையானது அல்ல, தட்டையானது என்று நிரூபிக்க விரும்பிய மனிதர் ராக்கெட் விபத்தில் மரணம்
அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையான பூமி உருண்டையானது என்ற கோட்பாட்டுக்கு மாறாக பூமி தட்டையானது என்பதை நிரூபிக்க விரும்பிய மைக்கேல் ஹியூஸ் என்பவர் ராக்கெட் விபத்தில் கலிபோர்னியாவில் பலியானார்.
தன் வீட்டிலேயே தயாரித்த ராக்கெட்டை அவர் செலுத்தும் முயற்சியில் பலியானதாக டிஸ்கவரி சேனலைச் சேர்ந்த ஒரு சேனல் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
64 வயதான மைக்கேல் ஹியூஸ் தொழில் ரீதியாக உண்மையில் ஒரு ஸ்டண்ட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. கலிபோர்னியாவின் பேர்ஸ்டோவில் தன் வீட்டிலேயே நீராவியில் இயங்கும் ராக்கெட் ஒன்றை வடிவமைத்தார். இந்த ராக்கெட்டின் மூலம் விண்ணில் சுமார் 1,500 மீ எழும்பி பூமி தட்டையானது என்று நிரூபிப்பதே தன் குறிக்கோள் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்து வந்தார்.
ஆனால் இவரது செய்தித் தொடர்பாளர் டேரன் ஷஸ்டர் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழுக்குக் கூறும்போது, ‘ராக்கெட் அறிமுகத்திற்கான விளம்பர முகாந்திரமாக அவர் பூமியை தட்டை என்று நிரூபிப்பதாகக் கூறிவந்தார்’ என்று கூறுகிறார். “அவர் அப்படி கருதுகிறார் என்று நான் நம்பவில்லை” இது ஒரு விளம்பர உத்தியாகவே நான் பார்க்கிறேன்., என்றார் ஷஸ்டர்.
ராக்கெட்டை விண்ணில் செலுத்தப்போகும் நிகழ்ச்சியை சிலர் பார்வையிட சிலர் பாலைவனம் போன்ற ஒரு பகுதிக்கு வந்து இதனை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.
வானில் எழும்பிய சில விநாடிகளிலேயே பாராசூட் ஒன்று உடைந்து நொறுங்கியதாகத் தெரிகிறது. ராக்கெட் கீழ்நோக்கிப் பாய்ந்து கீழே விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது.
