Last Updated : 19 Feb, 2020 02:51 PM

 

Published : 19 Feb 2020 02:51 PM
Last Updated : 19 Feb 2020 02:51 PM

வருடம் 300 நாட்கள் ஆடிக்கொண்டிருக்கிறேன்.. பணிச்சுமையினால் ஓய்வு ? - விராட் கோலி பதில்

தான் ஆண்டுக்கு 300 நாட்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருப்பதாகக் கூறும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பணிச்சுமை, வீரர்கள் களைப்பு ஆகிய விவகாரங்கள் இன்னும் திறந்த மனத்துடன் அனைத்து வெளிகளிலும் பேசியாக வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

இன்னும் 3 ஆண்டுகள் 3 வடிவங்களிலும் பெரிய பெரிய தொடர்கள் இருக்கின்றன அதன் பிறகு ஏதாவதொரு வடிவத்திலிருந்து ஓய்வு பெறுவது பற்றி யோசிப்பதாக சூசகமாகத் தெரிவித்தார் விராட் கோலி.

அதாவது அடுத்த 3 ஆண்டுகளில் 2 டி20 உலகக்கோப்பைகள், ஒரு 50 ஒவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்கள் இருக்கின்றன. 2021-ல் இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெறுகிறது. இந்த 3 தொடர்களும் மிக முக்கியமானவை என்று கூறும் விராட் கோலி, “நான் பெரிய பின்புலத்திலிருந்து யோசிக்கிறேன். வரும் 3 ஆண்டுகள் கறாரான ஆண்டுகள், அதன் பிறகு நாம் வேறு மாதிரியான உரையாடலில் ஈடுபடுவோம்” என்று இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் ஏதாவது ஒரு வடிவத்தைத் துறப்பீர்களா என்ற கேள்விக்கு விராட் கோலி இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “ஆனால் இந்த உரையாடலிலிருந்து நாம் மறைந்து கொள்ள முடியாது. 8 ஆண்டுகள் ஆகிறது, நான் ஆண்டுக்கு 300 நாட்கள் கிரிக்கெட் மைதானத்தில் செலவிடுகிறேன். அதாவது பயணம், பயிற்சி அமர்வுகள் அனைத்தையும் சேர்த்தே கூறுகிறேன். ஒவ்வொன்றிலும் தீவிரம் இருக்கிறது, இது நம் உடலைப் பதம் பார்க்கவே செய்யும்.

வீரர்கள் இவற்றையெல்லாம் யோசிக்காமல் இல்லை. போட்டிகள் நெருக்கமாக அமைந்து உங்களை ஓய்வுக்கு அனுமதிக்கா விட்டாலும் நாங்கள் தனிப்பட்ட முறையில் இடைவெளி விடுகிறோம். குறிப்பாக அனைத்து வடிவங்களிலும் ஆடும் வீரர்களுக்கு போதுமான ஓய்வு தேவை.

அதுவும் கேப்டன் என்பது சும்மா இல்லை. உத்திகளை வகுக்க வேண்டும் ஆகவே மூளைக்கும் அதிக வேலை எனவே அவ்வப்போது ஓய்வு கொடுப்பது முக்கியம்.

34-35 வயதில் இனி உடல் தாங்காது என்ற நிலை வரும் போது நாம் வேறு மாதிரியான உரையாடலில் ஈடுபடுவோம். அடுத்த 3 ஆண்டுகளுக்கு எனக்கு ஒன்றும் சிக்கல் இல்லை” என்றார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x