

ஜப்பான் கப்பலில் மேலும் 99 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “கோவிட்-19 வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பானின் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் மேலும் 99 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜப்பான் கப்பலில் கோவிட்-19 (கரோனா) வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 454 ஆக அதிகரித்துள்ளது.
ஹாங்காங் நகரத்தில் இருந்து கடந்த வாரம் டைமண்ட் பிரின்சஸ் கப்பல் ஜப்பான் வந்தது. இந்தப் பயணிகள் கப்பலில் மொத்தம் 3,711 பயணிகள் இருந்தனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தக் கப்பலில் 6 இந்தியப் பயணிகள், 132 பணியாளர்கள் என மொத்தம் 138 இந்தியர்கள் உள்ளனர்.
இந்தக் கப்பல் ஹாங்காங்கில் இருந்து வந்ததால், கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருக்கும் எனும் அச்சத்தால், 14 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். தொடர்ந்து கப்பலில் உள்ள பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தவறவீடாதீர்!