

கரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க சீனாவுக்கு அமெரிக்கா ரூ.715 கோடி நிதியுதவி வழங்குகிறது.
மத்திய சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வூஹான். இது சீனாவின் 7-வது மிகப்பெரிய நகரமாகும். கடந்த டிசம்பரில் வூஹானில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. சீனா முழுவதும் நேற்று ஒரே நாளில் 86 பேர் உயிரிழந்தனர். இதில் வூஹான் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமெரிக்கர் ஒருவரும், ஜப்பானியர் ஒருவரும் அடங்குவர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 725 ஆக உயர்ந்துள்ளது. 34,991 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1,280 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
வூஹான் உட்பட பல்வேறு நகரங்களில் பொது போக்குவரத்து முடக்கப்பட்டு அந்த நகரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. வூஹான் பகுதியில் வைரஸ் பாதிப்புள்ளதாக சந்தேகிக்கப்படும் நூற்றுக்கணக்கானோரை சீன ராணுவ வீரர்கள் நேற்று வீடுகளுக்குள் புகுந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சுகாதார ஊழியர்கள் தயங்குவதாகவும் அரசு ஊழியர்கள் தலைமறைவாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடமையில் இருந்து தவறும் அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் காய்கனிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. உணவு பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சீன பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வூஹான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
சீனா மட்டுமன்றி சுமார் 28 நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் 215, ஐரோப்பிய நாடுகளில் 36, வடக்கு அமெரிக்க நாடுகளில் 17, ஆஸ்திரேலியாவில் 15. தைவானில் 17, ஹாங்காங்கில் 26 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தொழிலதிபர்கள், பல்வேறு அறக்கட்டளைகள் சீனாவுக்கு தாராளமாக நிதியுதவி வழங்கி வருகின்றன. இந்த வரிசையில் அமெரிக்க அரசு தரப்பில் சீனாவுக்கு ரூ.715 கோடி வழங்கப்படும் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த ‘டயமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசு கப்பல் பல்வேறு நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்துக்கு சென்றது. இதில் 2,666 பயணிகள், 1,045 ஊழியர்கள் உள்ளனர். இந்த கப்பலில் உள்ள பயணிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பிருப்பதாக சந்தேகம் எழுந்தது.
138 இந்தியர்கள் பரிதவிப்பு
இதன் காரணமாக யோகோஹாமா துறைமுகத்துக்குள் சொகுசு கப்பல் அனுமதிக்கப்படவில்லை. துறைமுகத்துக்கு வெளியே கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. ஜப்பானிய மருத்துவர்கள் கப்பலுக்கு சென்று சோதனை நடத்தியதில் 64 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இந்தியாவை சேர்ந்த 138 பேர் உள்ளனர். அவர்கள் கப்பலை விட்டு வெளியேற முடியாமல் பரிதவிக்கின்றனர். கப்பலில் உள்ள இந்தியர்கள் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்று ஜப்பானிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.