

கரோனா வைரஸ் பரவலிலிருந்து காத்துக்கொள்ளும் ஆன்ட்டிவைரஸ் மாஸ்க் எனப்படும் வைரஸ் தடுப்பு முகமூடி உற்பத்தி போதுமான அளவு இல்லாதது கவலையளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
உலகையே அச்சுறுத்திவரும் கொடிய கரோனா வைரஸிலிருந்து காத்துக்கொள்ள உதவும் வைரஸ் எதிர்ப்பு மாஸ்க்கின் இருப்பு குறைந்துவருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரிக்கை விடுத்தார்.
தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறையை உலகம் எதிர்கொள்கிறது. குறிப்பாக கரோனா வைரஸ் பரவலிலிருந்து காத்துக்கொள்ளும் ஆன்ட்டிவைரஸ் மாஸ்க் உற்பத்தியில் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை தீர்க்க நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக இதற்கென்று உள்ள விநியோகச் சங்கிலி வலையமைப்பின் உறுப்பினர்களுடன் பேசி பாதுகாப்பு வேலைகளை முடுக்கிவிட வேண்டிய அவசரமான பணியில் நான் ஈடுபட்டுவருகிறேன்.
இந்த வார தொடக்கத்தில் இருந்தே உதவி தேவைப்படும் நாடுகளுக்கு முகக்கவசங்கள், கையுறைகள், சுவாசக் கருவிகள், பாதுகாப்பு தனிமைப்படுத்தும் ஆடைகள் மற்றும் சோதனைக் கருவிகளை டபிள்யூஎச்ஓ அனுப்பிவருகிறது.
இன்னும்கூட வைரஸின் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் குறித்த தரவுகளைப் பகிர்ந்து கொள்ள சில நாடுகள் தவறிவிட்டன. அந்த தகவல்களை உடனடியாக பகிர்ந்து கொள்ள அந்த உறுப்பு நாடுகளை கேட்டுக்கொள்கிறோம்.
கரோனா வைரஸ் பரவலை தனியாக எந்த நாடும் எந்த அமைப்பும் தடுத்துவிட முடியாது. கடந்த இரண்டு நாட்களாக வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இது ஒரு நல்ல செய்தி, ஆனால் அந்த செய்தியை நீங்கள் படிக்கும்போதே நாம் எச்சரிக்கிறோம் - இந்த எண்கள் மீண்டும் உயரக்கூடும்"
இவ்வாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.
தவறவிடாதீர்